Saturday, June 25, 2011

சினிமா நட்சத்திரங்களுடன், ‘இனிமா’ போன் கால் அனுபவங்கள்

சினிமா நட்சத்திரங்கள் மீது பலருக்கு ஒரு ’அபார ஈர்ப்பு ’இருக்கும். ஆனால் சினிமா நிருபர்களுக்கோ அது ’அகோர கடுப்பாக’ இருக்கும்.

சமாச்சாரம் இதுதான்.

(பொதுவாக ’ஒரு சில’ அல்லது ’ப’ல நட்சத்திரங்களை மட்டுமே இது குறிக்கிறது, எல்லா நட்சத்திரங்களையும் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திவிடுகிறேன்.)

நம்ம கோலிவுட் நட்சத்திரங்களில் பலருக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒரு அவசரத்திற்கு நாம் போன் செய்தால், மறு முனையில் தனது வீட்டிலோ, ஜிம்மிலோ அல்லது ஷூட்டிங் ப்ரேக்கிலோ அல்லது எங்கே இருந்தாலும் கூட, நமது போன் கால்லை எடுக்க மாட்டார்கள். (நம்மாட்களுக்கு ஹெல்த் கான்ஷியஸ் ரொம்பதான் அதிகம் போல. கையிடைப் பேசியில் அதிகம் பேசினால் புற்று நோய் வரும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்.). நாமும் விடாக்கண்டணாக எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும், எதிர்முனையில் ‘காந்திய’ பாலிஸி படி ஒரு இம்மியளவு கூட அவர்களிடம் எதிர்வினை இருக்கவே இருக்காது.

. ’இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்பா’ என்ற வடிவேலுவின் காமெடியை போல எவ்வளவு போன் கால் பண்ணினாலும், எஸ்.எம்.எஸ். பண்ணினாலும் ஆழ்கடல் போல அமைதியாக இருக்கும் அவர்களது அணுகுமுறை.


சில சமயங்களில் நாம் ஏதாவது விஷயத்தைக் கேட்டு போன் செய்தால்,
 ’ஜி இப்போ எடிட்டிங்ல இருக்கேன் அல்லது டிஸ்கஷன்ல் இருக்கேன். சாய்ந்தரம் கூப்பிடட்டுமா’ என்றபடி போன் கால்லை கட் பண்ணுவார்கள். மாலை ஆனதும், அவரது ஆட்களிடம் இருந்து போன் கால் வரும். ‘ சார்..அந்த மேட்டரை இப்போ வேண்டாம்னு சொல்றார். பின்னாடி பண்ணிக்கலாமே’ என்று சொல்லும் அந்தக் குரல். காரணம் அந்த நட்சத்திரத்துக்கு ‘கஜினி’ சூர்யா கதாபாத்திரத்தைப் போல ‘ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ்’ வந்திருக்கும். நம்முடைய நம்பரையோ, அல்லது நம்மை அவருக்கு ஞாபகம் இருக்காது. ஞாபகம் இருந்தால் அவரே போன் பண்ணியிருப்பாரே. அவர் நல்லவர் தான். பாவம் இப்படியொரு  மெம்மரி லாஸ் இருந்தால் என்னதான் பண்ண முடியும்?


ஆனால் ஒரேயொரு கிசுகிசுவையோ, அல்லது உண்மையில் நடந்த சமாச்சாரத்தையோ இரண்டே வரியில் எழுதி, அது பத்திரிக்கையில் வெளி வந்ததால் போதும்.

அதுவரை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த அதே நட்சத்திரம்,  ஆழ்கடல் போன்று அமைதியாக இருந்த அதே நட்சத்திரம், ‘சுனாமி’ போல பொங்கியெழுவார். இரவு ஒரு மணியானாலும் சரி, அல்லது அதிகாலை நான்கு மணியானாலும் சரி (டைமிங்கை கவனிக்கவும். அதற்கு முன்பு ’என்ன ’ நடந்திருக்குமோ யாருக்குத் தெரியும்) நம் செல்போனுக்கு ‘டர்ர்ர்ர்ர்..’ரென்று தொடர்புக் கொள்வார். நாம் அசதியில் தூங்கிக் கொண்டிருப்போம். ஆனாலும் இப்போது அவர் ‘விடாக்கண்டன்’ கதாபாத்திரமாக மாறி தொடர்ந்து போன் பண்ணுவார்.

போனை எடுத்ததும், ‘என்ன ஜி..இப்படி வந்திருக்கு...அப்படி வந்திருக்கு. நான் எதுவும் பேசவே இல்லையே. உங்களுக்கு என்ன தெரியும்..’ என்று கதகளி, கதக், குச்சுப்புடி, சல்ஸான்னு எல்லா நடனங்களையும் கலந்து கட்டி, நம்மூர் டான்ஸ் மாஸ்டர்களுக்கே தெரியாத ஒரு ‘மார்க்கமான’ ஆட்டம் போட்டுவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போன் காலை கட் பண்ணிவிடுவார்.

ஒரு நல்ல விஷயம் எழுதினாலோ, அல்லது அவர்களது பேட்டியோ அல்லது அவர்கள் சம்பந்தமான ஒரு கட்டுரையோ வெளிவந்தால் அதற்கு மனதார வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம் நட்சத்திரங்கள் பலரிடம் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

இதுதான் யதார்த்தம்.

சினிமாவில் இப்படி பல ’இனிமா’ அதிகம். இனிமா அனுபவங்கள் தொடரும்...


2 comments:

Anonymous said...

எதிர்பார்ப்பு இருக்கு தொடருங்கள்!
-லியோமேடி

Ar. Sujatha said...

nice article.. expecting more such articles..